Tamil History

 
மண்ணில் பிறக்கும் ஒவ்வொருவரும் தங்களின் பிறப்பிற்கான அர்த்தத்தை நிலைநாட்டிவிட்டு செல்லவேண்டும் என்பார்கள். தனது பிறப்பையும், செயலையும் அர்த்தமுள்ளதாக மாற்றியவர்தான் பெருந்தலைவர் காமராஜர். இந்தியாவின் கிங்மேக்கராக திகழ்ந்து இரண்டு பிரதம மந்திரிகளை உருவாக்கியவர் படிக்காத மேதை காமராஜர். அவரது பிறந்தநாளில் அவரைப் பற்றி சில சுவாரஸ்மான தகவல்களை தெரிந்து கொள்வோம். உலகப் படிப்பை படிக்கவேண்டும் என்பதற்காகாத்தான் தன் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தினாரோ என்னவோ? காமராஜர் படித்தது வெறும் ஆறாம் வகுப்புதான். ஆங்கிலம் தெரியாமலும் 6 ஆண்டுகளே கற்ற கல்வியுடனும் முதல் அமைச்சர் பதவியேற்ற அவர் தான் தலை சிறந்த தலைமைத்துவத்தை 9 ஆண்டுகளாக தமிழ் நாட்டுக்கு வழங்கினார். காமராஜர் பட்டபடிப்பு படிக்காதவராக இருந்தாலும் அவரைச்சுற்றி எப்போதும் படித்த மேதைகள் இருப்பார்கள். அவர் முதல் அமைச்சர் ஆன உடன் நாட்டு மக்களின் கல்வியில்தான் முதல் அக்கறை செலுத்தினார். உணவின்மையால் மாணவர்களின் கல்வி கெட்டுப்போகக்கூடாது என்பதற்காக பள்ளிகளில் இலவச உணவுத்திட்டத்தை அறிமுகம் செய்தார். "நாம் பெறத் தவறிவிட்ட படிப்பை, வரும் தலைமுறையாவது பெற்று, வளர்ந்து வாழட்டும். அன்னதானம் நமக்கு புதியது அல்ல. இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்குப் போட்டோம். இப்போது, பள்ளிக் கூடத்தை தேடிப்போய் போடச்சொல்கிறோம். அப்படி செய்தால் உயிர் காத்த புண்ணியம், படிப்பு கொடுக்கும் புண்ணியம் இரண்டும் சேரும்.......என் மனதில், எல்லோர்க்கும் கல்விக் கண்ணைத் திறப்பதை விட முக்கியமான வேலை இப்பொதைக்கு இல்லை. நான் இதையே எல்லாவற்றிலும் முக்கியமானதாகக் கருதுகிறேன். எனவே மற்ற வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு, ஊர் ஊராக வந்து, பகல் உணவுத் திட்டத்திற்க்குப் பிச்சையெடுக்கச் சித்தமாக இருக்கிறேன்" என்று பேசியவர் பெருந்தலைவர். எழுத்தறிவு இன்மையை போக்க 11 ஆம் வகுப்பு வரை இலவச கட்டாய கல்வியை அறிமுகப்படுத்தினார். அனைத்துப் பள்ளி குழந்தைகளுக்கும் இலவச சீருடை வழங்கினார் . அரசியலில் தன்னை எதிர்த்தவர்களையே தன்னுடன் சேர்த்துக்கொண்டார் . அவர் முதலமைச்சர் ஆனவுடன் அதே பதவிக்கு தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களையே அமைச்சர் ஆக்கினார். தான் முதல் அமைச்சராக இருந்த போது வறுமையில் வாடிய தன் தாய்க்கு சிறப்பு சலுகைகள் தராதவர் . அவரது காலகட்டத்தில்தான் இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்ட மாநிலம் என்ற பெருமையை தமிழ் நாடு பெற்றது . தமிழுக்கு நல்ல அங்கீகாரத்தை பெற்று கொடுத்தவர் காமராஜர். நீதி மன்றம் அரசு அலுவலகம் அனைத்திலும் தமிழை கொண்டுவந்தார். மூத்த தலைவர்கள் அரசியலில் பதவி வகிக்ககூடாது,பதவி விலகி கட்சி நலனுக்காக செயல்ப்பட வேண்டும் என்று கூறியதோடு நிற்காமல் தானும் பதவி விலகி முன் உதாரணமாக இருந்தார். இரண்டு முறை பிரதமராகும் வாய்ப்பிருந்தும், லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமராக்கிய கிங்மேக்கர் அவர். சினிமா என்றால் காமராஜருக்கு எட்டிக்காய். சினிமாவில் நாம் பார்த்து ஆச்சரியப்படும் ஹீரோக்களைப் போல அல்லாமல் ரியல் ஹீரோவாக வாழ்ந்தவர் அவர். அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம்தான். என்றைக்கும் தான் ஏழைப்பங்காளன்தான் என்பதை வாழ்நாளில் நிரூபித்துவிட்டு சென்ற உத்தமர் அவர். அவரது நீங்காத நினைவுகளை அவரது பிறந்தநாளில் நினைவுகூர்வதில் பெருமிதம் கொள்வோம். தமிழகத்தை ஆட்சி செய்யும் அரசியல் தலைவர்கள் பெருந்தலைவர் காமராஜரை கட்சி சார்பற்ற தலைவராக பார்க்காமல் அவரது பிறந்தநாளினை தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட முன்வரவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும். இன்றைக்கு தமிழகம் கண்டுள்ள பல வளர்ச்சிகளுக்கும் பிள்ளையார் சுழி போட்டவர் இந்த கருப்புத் தங்கம்தான். நல்ல தலைவர் கிடைக்காமல் தத்தளித்து வரும் இன்றைய தமிழகத்திற்கு, உண்மையிலேயே பெரும் தலைவராக விளங்கியவர் காமராஜர் மட்டுமே. தமிழகத்தின் உண்மையான பொற்கால ஆட்சி என்றால் அது காமராஜரின் ஆட்சி மட்டுமே. மீண்டும் காமராஜரின் ஆட்சி வருமா... கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அது பெரும் கனவாகவே தோன்றுகிறது...
 



 

No comments:

Post a Comment

var adfly_advert = 'int'; var adfly_advert = 'banner'; var adfly_advert = 'int'; var adfly_advert = 'banner';